Last Updated : 25 Jan, 2023 08:09 PM

 

Published : 25 Jan 2023 08:09 PM
Last Updated : 25 Jan 2023 08:09 PM

7 மாத குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய உடைந்த பிளாஸ்டிக் பாகத்தை அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்

குழந்தையின் மூச்சுக்குழாயிலிருந்து அகற்றப்பட்ட உடைந்த பிளாஸ்டிக் பாகம்.

கோவை: 7 மாதக் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய உடைந்த பிளாஸ்டிக் பாகத்தை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

கோவை பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தைச் சேர்ந்த 7 மாத ஆண் குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட இருமல், மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், மூச்சுத் திணறலுக்கான காரணத்தை கண்டறிய உள்நோக்கி குழாய் செலுத்தி பார்த்தபோது, குழந்தையின் மூச்சுக் குழாயில் உடைந்த பிளாஸ்டிக் பாகம் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்தக் குழந்தைக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல், பிளாஸ்டிக் பாகத்தை அகற்றி குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, “காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் வி.சரவணன், மயக்கவியல் துறை பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் விளையாட்டு பொருளின் உடைந்த பாகத்தை எடுக்காமல் விட்டிருந்தால் குழந்தையின் நுரையீரல் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். எனவே, குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, இருமல் ஏற்பட்டாலோ மருத்துவரை உடனடியாக அணுகி சிகிச்சை பெற வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x