Published : 31 Dec 2016 01:27 PM
Last Updated : 31 Dec 2016 01:27 PM

இன்று விமர்சிப்போரையும் நாளை பின்தொடர வைப்போம்: முதல் உரையில் சசிகலா உறுதி

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட வி.கே.சசிகலா தனது முதல் உரையில், "அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தான் அதிமுகவின் அடையாளம். இவர்களைத் தவிர, வேறு யாரும் இங்கே முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி" என அவர் கூறினார்.

மேலும், "நம்மை இன்று விமர்சிப்பவரும் கூட, நாளை மனமுவந்து நம்மை பின் தொடரும் அளவுக்கு, ஒரு புனிதமான பொது வாழ்வை நாம் மேற்கொள்வோம்" என்றார் அவர்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனை ஏற்றுக்கொண்ட சசிகலா இன்று (சனிக்கிழமை) முறைப்படி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் முதன்முறையாக உரையாற்றினார்.

சசிகலா உரை முழு விவரம்:

"தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.

என் உயிரில் நான் சுமக்கிற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!

உலகமே வியக்கிற வெற்றிகளால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா, இப்போது நம்மிடம் இல்லாத நிலையில், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், அதிமுக தான் தமிழகத்தை ஆளும் என, அவர் முன் வைத்துச் சென்றிருக்கிற நம்பிக்கையைக் காப்பதற்காக, இங்கே நாம் கூடி இருக்கிறோம்.

நமக்கெல்லாம் அடையாளமாக, நமக்கெல்லாம் பெருமைகள் பல தேடித் தந்து, இந்த இயக்கத்தின் இதயமாக, நம் ஒவ்வொருவரின் இதயத்தின் இயக்கமாக, எனக்கு எல்லாமுமாய்... எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்த, அவரை வணங்குகிறேன்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு, தாய் இருந்து நம்மை வழி நடத்திய தன்னிகரில்லா இந்த மாபெரும் இயக்கத்திற்கு, என்னை கழகப் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்து, ஜெயலலிதாவின் வழியில் கழகப் பணியாற்றிட, என்னை பணித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அவரோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று, மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது.

உங்களின் அன்புக் கட்டளையை ஏற்க வேண்டிய கடமையும், கட்டாயமும் எனக்கு ஏற்பட்டு உள்ளது. நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று; கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது. தலையில் இடி வந்து விழுந்ததைப் போல, நன்கு உடல் நலம் தேறி வந்தவர், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.

அவருக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. எனக்கோ அவர்தான் வாழ்க்கை. ஆனால், இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டார்.

75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள். அவரை மீட்டுவிட வேண்டும் என்ற மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடான கோடி தொண்டர்களாகிய, நமது ஆன்மீக வழிபாடுகளும் ஒன்று சேர, அவை அவரைக் காப்பாற்றிவிடும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வருகிற அளவுக்கு அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தும், தலை சிறந்த சிகிச்சைகள் மேற்கொண்டோம். லண்டன் மருத்துவர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மருத்துவர்களின் பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது.

இன்னும் சில நாட்களில் அவரை பூரண நலம் பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்ற வேளையில், அவரின் இதயத் துடிப்பை நிறுத்தி, 10 கோடி தமிழ் மக்களின் பாசத் தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக் கொண்டான்.

இன்று, நாட்டு அரசியலையே, தென்னாட்டுப் பக்கம் திருப்பிக் காட்டிய ஒரு தேவதை இல்லாத அரசியல் மாடம், களை இழந்து நிற்கிறது. எனக்கோ, அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்கதி நிலை.

சில நிமிடங்கள் மட்டுமே அவரை சந்தித்தவர்கள்; சில முறை மட்டுமே அவரைப் பார்த்தவர்கள்; சில விநாடிகள் மட்டுமே அவரிடம் பேசியவர்கள்; அவர்களே இன்று அவரின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்களை அவருடன் மட்டுமே என் வாழ்நாட்களை கரைத்துவிட்ட எனக்கு எப்படி இருக்கும் என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அவரின் அரசியல் ஆரம்ப காலம் முதல், அவரோடு தொடர்ந்து பயணித்தேன். அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்; அம்மா என்கிற அந்த வார்த்தை இந்த அளவுக்கு மக்கள் இதயத்தை ஊடுருவும் என்று!

ஆனால், இத்தனை ஆண்டுகள் அவரோடு இருந்த என் ஆசையெல்லாம், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

"அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா; அக்கா, மதிய சாப்பாட்டிற்கு என்ன வேண்டும்'' என அனுதினமும் அவரைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்.

எனக்கு இப்போது 62 வயது ஆகிறது. கடந்த 33 ஆண்டுகளாக, என்னுடைய 29-ஆவது வயது முதல் அவருடன் இருந்துள்ளேன். அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதை விட, அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

அவரும், அதிமுகவுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை, எஞ்சி இருக்கும் காலத்தை, அவர் கட்டிக் காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது.

அவருக்கென்று ஆசைகள் இருந்தது. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. அது, இந்த இயக்கம் வாழ வேண்டும்; தமிழ் மக்களை இந்த இயக்கம் வாழ வைக்க வேண்டும் என்பது தான். இத்தனை ஆண்டு காலமாக அது நிறைவேறியது. இனிமேலும் அது நிறைவேறிக் கொண்டு தான் இருக்கும்.

தனக்குப் பின்னால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சட்டமன்றத்திலே நம் அரசியல் எதிரிகளுக்கு முன்னால், அவர் சிங்கம் போல கர்ஜித்தார். அது, அவர்களுக்கு மட்டும் பதில் அல்ல. அவர் இந்த உலகுக்கே சொன்ன செய்தி அது.

எத்தனையோ போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள் என எவ்வளவோ வந்த போதிலும், அதில் எல்லாம் அவர் வென்று வருவார்; நான் உறுதுணையாக இருப்பேன். ஆனால் இன்று, தாயை இழந்த பிள்ளைகளாய் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களின் பலர் செயல்பாடுகளை; பண்புகளை அவர் என்னிடம் பகிர்ந்துகொள்வார். எப்போதும், செயல்பாட்டையும், விசுவாசத்தையும் தான் அவர் நம்மிடம் எதிர்பார்த்திருந்தார். சில நேரங்களில் அவற்றைக் கூடுதலாகவே எதிர்பார்த்தார். அதற்குரிய வாய்ப்புகளையும் அவர் ஏற்படுத்தித் தான் தந்தார். அத்தகையவரின் எதிர்பார்ப்பு தான், நம்மை இயக்கும் சக்தியாகத் திகழ்ந்தது. அது, தொடர்ந்து அமைந்திட வேண்டும். அணையா நெருப்பாக அதை நாம் ஒவ்வொருவரும் இதயத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

அடிப்படையில் அவர் துணிச்சலின் பிறப்பிடம். அன்றைக்கு ஆண் ஆதிக்கம் நிறைந்த அரசியலில், இந்தியா முழுவதும் தேடினாலும் ஒரு இந்திராவைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்ற நிலையில், ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம், பெண் இனத்திற்கே ஒரு வழிகாட்டுதலையும், வலிமையையும், நம்பிக்கையையும் கொடுத்தது.

அரசியல் மாடங்களில் பெண்கள் பங்கேற்று பெரும் புகழ் சேர்க்க முடியும் என்கிற புரட்சிகர வரலாறு அவரால் தான் உருவானது. இந்த இயக்கத்தின் மிகப் பெரும் ஊக்க சக்தியே தாய்மார்கள் தான் என்பதைக் கண்டு உலகமே வியக்கிறது.

இன்றும் அவருக்குப் பிறகு ஒரு பெண்ணாக, நான் கழகத்தின் பொதுச் செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமான காரணம், கோடான கோடி சகோதர, சகோதரிகள் எனக்கு பக்க துணையாக நிற்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான். பெ

பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம், எம்.ஜி.ஆரின் பொன்மனம், இவை யாவும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவின் போர்க் குணத்திற்கு ஈடு இணை ஆகிட ஒருவராலும் முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது; நிரப்பவே முடியாது.

ஆனாலும் அவர், நமக்கு கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம்.

அவர் நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா... இவர்கள் தான் இந்த மாபெரும் இயக்கத்திற்கு அடையாளம். இவர்களைத் தவிர, வேறு யாரும் இங்கே முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி.

எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர்கள். அந்த மகத்தான வழியில் தான் இந்த இயக்கம் இன்றுவரை பயணித்திருக்கிறது. இனியும், அதே வழியில் தான் வீறு நடை போடும்.

ஜெயலலிதா எந்த வேகத்தில் இந்த இயக்கத்தை வழி நடத்தினாரோ, அதே வேகத்தோடு, எந்த ராணுவ கட்டுப்பாட்டோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் வைத்திருந்தார்களோ, அதில் கடுகளவும் குறையாத, அதே கட்டுப்பாட்டோடு...

உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு அளித்து அழகு பார்க்க, எந்த அளவுகோலை அவர் கொண்டிருந்தாரோ, அந்த அளவுகோலோடு அவர் காட்டிய வழியில் இருந்து இம்மி கூட விலகாமல் இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம்.

கனி வெளியே தெரியும்! காய் வெளியே தெரியும்! பூ வெளியே தெரியும்! இலை வெளியே தெரியும்! கிளை வெளியே தெரியும்! ஆனால், இதையெல்லாம் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த இமயப் பேரியக்கத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் அப்பழுக்கில்லா கோடான கோடித் தொண்டர்கள். உழைப்பு தான் இந்த இயக்கத்தின் உயிர் நாடி என்பதை உணர்ந்து, கழகத்தின் தொண்டர்களை நாம் கண் இமையாகக் காப்போம். தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றிமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்.

நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால், நாளை நமதே, என்ற மக்கள் திலகத்தின் வாய் மொழியையே, நாம் எந்நாளும் தாய்மொழியாக ஏற்போம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். , பிறந்த நாள் நூற்றாண்டு விழா, ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

இவ்விழாவினை, நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அவர் கனவை நிறைவேற்றும் வண்ணம், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, கழகத்தின் சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டின் நினைவாக, சிறப்பு அஞ்சல் தலையும், அவரது திருஉருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயமும் வெளியிட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் நிறைவாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன்.

நம்மை இன்று விமர்சிப்பவரும் கூட, நாளை மனமுவந்து நம்மை பின் தொடரும் அளவுக்கு, ஒரு புனிதமான பொது வாழ்வை நாம் மேற்கொள்வோம்.

இன்னும் எவ்வளவு காலம் நான் வாழ்கிறேனோ, அதன் முழுமையையும் கழகத்தின் நலத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உரித்தாக்கிக் கொண்டு உழைப்பேன்.

`ஒன்றரைக் கோடி பிள்ளைகளை உன் வசத்தில் ஒப்படைத்திருக்கிறேன்' என்று ஜெயலலிதாவின் ஆன்மா என் அருகில் இருந்து ஆணையிடுவதாகவே என்றும் நான் உணர்கிறேன். அவரின் லட்சியக் கனவுகளை உயிராகக் காப்பதற்கு, நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக, என்னை ஒருமனதாக தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், ஜெயலலிதா வழியில் பின்பற்றுவோம்.

அவர் வகுத்துத் தந்திருக்கும் நெறிமுறையில் நெல் முனை அளவும் மாறாமல், இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றுவேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய பணிகள் எல்லாம் வெற்றி பெற, உங்களின் ஒத்துழைப்பும், இறைவனின் ஆசீர்வாத்தையும் வேண்டுகிறேன்.

பெரியாரின் தன்மானம்; அண்ணாவின் இனமானம்; எம்.ஜி.ஆரின் கனிவு; ஜெயலலிதா நமக்கு போதித்த துணிவு, இவற்றையே உயிராக, உணர்வாகப் போற்றுவோம்.

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழை இப்புவியே சொல்லும். எப்படை வரினும் இப்படையே வெல்லும்!" என்று உறுதி கூறி, `மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று முழக்கமிட்டவரின் வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம். நன்றி, வணக்கம்.''

இவ்வாறு சசிகலா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x