“ஒன்று கூடுவோம்” - நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு “ஒன்று கூடுவோம்” என்று கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த திங்கட்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று (ஜன.25) காலை 11.30 மணிக்கு தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒன்று கூடுவோம் மு.க.ஸ்டாலின். வென்று காட்டுவோம் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழ்நாடு வாழ்க!" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in