Published : 21 Jul 2014 08:12 AM
Last Updated : 21 Jul 2014 08:12 AM

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றி கொலை: தேமுதிக பெண் கவுன்சிலரின் மகன் தப்பியோட்டம்

அரக்கோணம் அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற தக்கோலம் காவல் நிலைய தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே கொசஸ்தலை ஆறு உள்ளது. வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக இருப்பதால் 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மூன்று மாவட்ட எல்லையில் உள்ள புரிசை என்ற கிராமம் அருகே திருட்டுத்தனமாக சிலர் மணல் அள்ளுவதாக ஞாயிற்றுக்கிழமை காலை தக்கோலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் தலைமைக் காவலர் கனகராஜ் (43) ஆகியோர் சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் புரிசை கிராமத்துக்கு சென்றனர். வந்திருப்பது போலீஸ் என தெரிந்துகொண்டு அக்கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்களை ராஜன் மற்றும் கனகராஜ் துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது தக்கோலம் டவுன் பஞ்சாயத்து 6-வது வார்டு தேமுதிக உறுப்பினர் செண்பகவள்ளியின் மகன் சுரேஷ் என்பவர் நின்றிருந்த டிராக்டரை இயக்கி வேகமாக புறப்பட்டார். அவரை மடக்கிப் பிடிக்க கனகராஜ் டிராக்டர் மீது ஏறியுள்ளார். அப்போது டிராக்டரை அசுர வேகத்தில் சுரேஷ் ஓட்டியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனகராஜ், டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கினார். கனகராஜ் சக்கரத்தில் சிக்கியதையும் பொருட்படுத்தாமல் டிராக்டரை சுரேஷ் வேகமாக ஓட்டி தப்பிச் சென்றார்.

சம்பவ இடத்திலேயே பலி

டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கிய கனகராஜ் படுகாயமடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்த வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்துப் பார்த்து கனகராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

தலைமறைவான டிராக்டர் டிரைவர் சுரேஷை தேடிவருகின்றனர். இறந்த கனகராஜ் பாணாவரத்தில் குடும்பத்துடன் வசித்துள் ளார். அவருக்கு மனைவி குமாரி, மகள் மேனகா உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x