சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை பிரச்சினை முழுமையாக தீர மேலும் 10 நாட்கள் ஆகும்: மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை பிரச்சினை முழுமையாக தீர  மேலும் 10 நாட்கள் ஆகும்: மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை பிரச்சினை முழுமையாகத் தீர மேலும் 10 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் மின்விநியோக கட்டமைப்புகள் சேதமடைந்து மின்விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது. மின்விநியோகம் முழுமையாக சீரடைய இன்னும் 10 நாட்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 450 மின்மாற்றிகள் மற்றும் 4 ஆயிரத்து 500 மின் பகிர்மான பெட்டிகள் சேதமடைந்தன. 54 உயரழுத்த மின்கோபுரங்கள் மற்றும் மின்தடங்களும் சேதமடைந்தன. மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரம் பணியாளர்கள் உட்பட 14 ஆயிரத்து 700 மின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இரவு, பகலாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சாரத்தை கொண்டு வரும் தடத்தில் உள்ள 54 உயரழுத்த மின்கோபுரங்கள் சேதமடைந்ததால் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை துணை மின் நிலையங்களுக்கு கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

தற்போது சீரமைக்கப்பட்ட வழித்தடங்கள் வாயிலாக சுமார் 1,300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கொண்டுவர இயலும். எனவே சென்னையில் உள்ள குறைந்த மின்னழுத்த நுகர்வோர்களுக்கான பயன் பாட்டுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குறைந்த மின்னழுத்த நுகர்வோர்களும் பயனடையும் வகையில் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நேரங்களில் சுழற்சி முறையில் பகிர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

உயர் மின்னழுத்த கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களை சீரமைக்கும் பணிகள் இன்னும் 10 தினங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை குறைந்த மின்னழுத்த நுகர்வோர்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரம் பகிர்ந்து வழங்கப்படும். உயர்ந்த மின்னழுத்த வழித்தடங்கள் மற்றும் கோபுரங்கள் சீரமைக்கப்பட்ட பின்னரே உயர் மின்னழுத்த நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in