Last Updated : 11 Dec, 2016 09:07 AM

 

Published : 11 Dec 2016 09:07 AM
Last Updated : 11 Dec 2016 09:07 AM

ஜெயலலிதா விட்டு சென்ற தமிழகம்: புள்ளி விவரங்கள் தரும் செய்திகள்

கடந்த 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்த ஜெயலலிதா, விட்டு சென்ற தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன? இம்மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள் எவை? இன்னும் முன்னேற வேண்டிய இடங்கள் என்ன? ஆதாரபூர்வமான புள்ளி விவரங்களின் வழியாக தமிழகத்தின் நிலவரத்தை பார்த்தால் அதிக நிறைகளும், சில குறைகளும் இருக்கின்றன.

பொருளாதார குறியீடுகளை எடுத்து கொண்டாலும், சமுதாய குறியீடுகளை (social indicators ) பார்த்தாலும், தமிழ் நாடு மற்ற பல மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தெரிகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் 98.8 சதவீத குடியிருப்புகள் மின்சார இணைப்பு பெற்றவை. பஞ்சாப் (99.6%), (98.9%) ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தமிழகத்தை காட்டிலும் முன்னேறிய நிலையில் உள்ளவை. எரிபொருள் வளம், நீர் வளம் இல்லாமலேயே தமிழகம் உச்ச நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏன், வளர்ச்சிக்கு பெயர் போன குஜராத்கூட 96 % தான். இது தமிழகத்தின் மிக பெரிய சாதனை.

இது போல இன்னும் பல சமூக குறியீடுகளில் தமிழகம் பெற்றுள்ள இடங்களை அட்டவணையில் காணலாம். மாசற்ற சமையல் எரி பொருள் உபயோகம், மருத்துவ காப்பீடு, பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், கல்வியறிவு ஆகியவற்றில் தமிழகம் முன்னோடியாய் இருப்பதை காண முடிகிறது.

ஆனால், மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி மற்றும் துப்புரவு துறைகளில் தமிழ்நாடு இன்னும் முன்னேற வேண்டும் என்ற நிலையில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயோடின் கலந்த உப்பு உட்கொள் ளுதலில் தமிழகம் பின் தங்கியிருப்பது போல தெரிகிறது. ஆனால், இந்த புள்ளி விவரங்கள், அண்மையில் வெளியிடப் பட்டவை என்றாலும் அவை 2015-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரையில் இந்திய அரசாங்கம் நடத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey - 4) அடிப்படையில் கணக்கிடப்பட்டவை.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ‘அம்மா உப்பு' (Amma Salt ) என்ற ஐயோ டின் கலந்த உப்பு வகைகளை தமிழக அரசு விற்பனை செய்ய துவங்கியது. அத னால், தமிழ் மக்களின் ஐயோடின் கலந்த உப்பு உட்கொள்ளுதலில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்பலாம்.

2014 - 2015 ஆம் ஆண்டு ரூபாய் ரூ.9 .76 லட்ச கோடி மொத்த உள்நாட்டு பொருளாதார உற்பத்தி (ஜிடிபி) கொண்ட தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் இடம் பெற்றது. முதல் இடம் பெற்ற மஹாராஷ்டிரா தமிழகத்தை விட அதிக பரப்பளவு கொண்டது, மற்றும் இயற்கை வளமும் அதிகமாக கொண்டது என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

ஆனால்...

இப்படி பல பொருளாதார, சமூக அளவுகளில் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு, வேலையின்மை, குற்றம், விபத்து, தற்கொலை போன்ற வேறு சில அளவுகளில் பின் தங்கியிருப்பது வருந்தத்தக்கது.

பொருளாதார உற்பத்தி வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கு பயன்பட்டதாக தெரியவில்லை. 15 வயதுக்கு மேற்பட்ட 1,000 நபர்கள் எத்தனை பேர் வேலையில் இல்லாமல் இருக்கிறார்கள் என்னும் கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது. 2011-12-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிராமப்புறத்தில் 1,000 நபர்களுக்கு 21 பேரும், நகர்புறத்தில் 25 பேரும் வேலையில்லாமல் இருந்தனர். ஒட்டு மொத்தமாக 1,000 நபர்களில் 22 இளைஞர்களுக்கு வேலையில்லை. ஆனால் 2015-16 புள்ளி விவரப் படி ஒட்டுமொத்தமாக 1,000 நபர்களுக்கு 42 பேருக்கு வேலை இல்லை. கிராமப்புறத்தில் வேலை யில்லாதவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து 45 ஆக இருக்கிறது. இது தமிழகத்துக்கு நல்ல அறிகுறியாக தெரியவில்லை.

‘ஒரு லட்ச’ நபர்களுக்கு இத்தனை குற்ற சம்பவங்கள்' என்ற முறை யில் குற்ற விகிதம் ( crime rate) கணக் கெடுக்கப்படுகிறது. 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என 36 பிரதேசங்கள் கொண்ட இந்தியாவில், பல அளவுக்கூறுகளில் முன்னேற்றம் பெற்ற தமிழகம் 2015-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் 8-ம் இடத்தில் இருப்பது ஒரு களங்கம் தான்.

தமிழ் நாட்டில் 2015-ம் ஆண்டில் 1,748 கொலைகள் நடந்தன என தேசிய குற்ற பதிவுகள் பணியகம் ( National crime records Bureau ) தெரிவிக்கிறது. இதிலும் தமிழகம் 7-ம் இடம். (உத்திர பிரதேசம் 4,732, பிஹார் 3,178, மஹாராஷ்டிரா 2,509, மத்திய பிரதேசம் 2,339, ஆந்திர பிரதேசம்-தெலங்கானா 2,287, மேற்கு வங்கம் 2,096, ஆகிய மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிக குற்றங்கள் நடந்திருக்கின்றன).

அதே போல ‘விபத்துகள்' என்பதில் தமிழகத்தின் விவரங்களை பார்த்தால் சற்று முகம் சுளிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 2014-ம் ஆண்டில் 69,095 விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே ‘முதல் இடம்' பெற்றது தமிழ்நாடு. அவற்றுள் 67,252 சாலை விபத்துகள். உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்து மிகுதியான சாலை விபத்து உயிரிழப்புகள் தமிழ் நாட்டில் தான்.

தற்கொலை என்பதை எடுத்துக் கொண்டால் 2014-ம் ஆண்டில் தமிழகம் இரண்டாம் இடம். மஹாராஷ்டிராவில் 16,307 தற்கொலை சம்பவங்கள்; தமிழ் நாட்டில் 16,122. இவ்விவரங்கள், ஜெயலலிதா அவர்கள் விட்டு சென்ற தமிழ் நாட்டில் மனித வள மேம்பாட்டு அளவுகள் பல மகிழ்ச்சி தரக் கூடியவையாக இருப்பினும், புதிய முதலமைச்சரின் அவசர கவனத்திற்கு வர வேண்டியவையும் சில உள்ளன என வலியுறுத்துகின்றன.

- ramesh.m@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x