

சென்னை: பணிநிரந்தம், ரூ.21,000-க்கு குறையாத மாத ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி சார்பில் சென்னையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
240 நாட்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம், எந்தத் தொழில் செய்தாலும் ரூ.21,000-க்கு குறையாத மாத ஊதியம், நல வாரியங்களில் ரூ.6 ஆயிரத்துக்குக் குறையாமல் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில், தமிழகம் முழுவதும் 86 இடங்களில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, பாரிமுனை குறளகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி தேசியத் தலைவர் டி.எம்.மூர்த்திதலைமை வகித்துப் பேசும்போது, ‘‘இந்தியத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற வேலை பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றுக்கான 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மத்திய அரசுமாற்றியுள்ளது. ஊராட்சி முதல் மாநகராட்சி வரை துப்புரவுப் பணியில்ஈடுபடும் தொழிலாளர்களை குறைந்தபட்சக் கூலியைக்கூட வழங்க மறுப்பது நியாயமற்றது’’ என்றார்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து ராயபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.