Published : 25 Jan 2023 06:37 AM
Last Updated : 25 Jan 2023 06:37 AM

ஜி20 உச்சி மாநாடு குறித்த கருத்தரங்கம்: சென்னை ஐஐடியில் நடைபெற்றது

சென்னை: ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் நடைபெற்றது.

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைபொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சார்ந்து நாடுமுழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்ஐஎஸ்) சார்பில் சென்னை ஐஐடியில் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்ஐஎஸ் அமைப்பின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரி பேசியதாவது:

ஜி20 மாநாடு இந்த உலகுக்கு ஒரு கருத்தை முன்வைக்கிறது. பருவநிலை மாற்றத்தால் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைவருக்குமானதாக இருப்பதால் நாம் ஒன்றாக வளர வேண்டும்.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதுதான் இந்தியா உலகுக்கு சொல்லும் கருத்தாகும். நாடு முழுவதும் நடைபெறும் இந்த கருத்தரங்கின் நோக்கம் ஜி20 செயல்முறையில் இளைய தலைமுறையினரை ஈர்த்து ஊக்கப்படுத்துவதாகும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x