

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய முதல்வரை பணிநீக்கம் செய்யக் கோரி நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி இயங்குகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அந்த மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கல்லூரி சார்பிலும் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும், கல்லூரி நிர்வாகம் சார்பில் முதல்வர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, முதல்வரை பணிநீக்கம் செய்யக் கோரியும், கரோனா காலத்தில் வகுப்புகள் நடத்தப்படாததால் அதற்கான கல்விக் கட்டணத்தை திரும்பித் தர வலியுறுத்தியும், கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று அதன் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரம் சார்ந்து கல்விக் கல்லூரி இயக்குநரகத்தின் இணை இயக்குநர்கள் மீனா மற்றும் தீபா ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.