

சென்னை: காந்தி உலக மையத்தின் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னையில் ஜனவரி 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
காந்தி உலக மையம் எனும் சமூகநல அமைப்பு சார்பில் தமிழர் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘மண்ணும் மரபும்’ என்ற பெயரிலான கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் இயற்கை வேளாண் பொருட்களுக்கான நேரடி சந்தை, சித்த மருத்துவ முகாம், நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மற்றும் மரபு விதைகள் காட்சிப்படுத்தல், அரிய வகை மூலிகை கண்காட்சி நடைபெறுகிறது.
நாட்டுப்புறக் கலைகள்
பாரம்பரிய உணவு வகை, மரபு சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், மண்பாண்டம் தயாரிப்பு, 3000 ஆண்டு பழமையான இசைக் கருவிகள் காட்சியகம், பழங்கால போர்க் கருவிகள், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுகள், பனைப் பொருட்கள் காட்சி, மரபு சார்ந்த சமையல், அழிந்து வரும் நாட்டு மாடுகள் உட்பட கால்நடைகள் அணிவகுப்பு, நிழல்பாவை கூத்து, ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுதவிர முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் மற்றும் பல மரபு சார்ந்த நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இதில்நடைபெறும் வேளாண் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். மேலும், மரபு காவலர், மண்ணின் மைந்தர் பெயரில் மண்சார்ந்து பணியாற்றிய ஆளுமைகளுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் நலிந்த கலைஞர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், இளைஞர்களிடம் நமது தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் உந்துதலாக அமையும் என்று காந்தி உலக மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.