

மாமல்லபுரம்: சென்னையில் வரும் 31 மற்றும் பிப்.1, 2 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டினர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்கின்றனர். இதையடுத்து சுற்றுலா வளாகங்களில் அருகில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு தாக்கம் ஏதும் உள்ளதா என தொழில் நுட்பக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 2019 அக்டோபரில் நடந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு முதலே உலகத்தின் பார்வையை மாமல்லபுரம் கவர்ந்தது. மேலும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், மாமல்லபுரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உருமாறியுள்ளது.
இந்நிலையில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி வழங்கப்பட்டது. இதனால் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை 200-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நாடு முழுவதும் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகிறது. இதன்படி சென்னையில் ஜன.31 முதல் பிப்.2-ம் தேதி வரை முதலாவது கல்விக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பிப். 1-ம் தேதி இவர்கள் மாமல்லபுரம் சுற்றுலா வருகின்றனர். அங்கு மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசிக்கின்றனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதையடுத்து, வெளிநாட்டு பிரதிநிதிகளின் உடல் நலம் மற்றும் பாகாப்பை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் அருகில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கலைச்சின்ன வளாகங்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அணுசக்தி துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்பேரில், கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் இணைந்து, கடற்கரை கோயில் உட்பட புராதன சின்னங்களின் வளாகத்தில் கதிர்வீச்சு உள்ளதா என நேற்று ஆய்வு செய்தனர். கதிர்வீச்சு பரவலை துல்லியமாக கண்டுபிடிக்கும் ரேடார் கருவி மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையை தமிழக அரசு மற்றும் மத்திய அணுசக்தி துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என அக்குழுவினர் தெரிவித்தனர்.