

சென்னை: நாற்காலி கொண்டுவர தாமதமானதால் கட்சி தொண்டர் மீது அமைச்சர் நாசர் கல் வீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமைச்சர் நாசருக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக, திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலைஅருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனை திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் அமருவதற்காக, நாற்காலிகளை எடுத்து வருமாறு தொண்டர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நாற்காலிகள் எடுக்க சென்ற தொண்டர், ஒரே ஒரு நாற்காலியை அதுவும் மெதுவாகவும் எடுத்து வருவதை பார்த்து கோபமடைந்த அமைச்சர், அவரை ஒருமையில் பேசியபடி, அங்கிருந்த மண் குவியலில் ஒரு கல்லை எடுத்து அந்த தொண்டர் மீது வீசி எறிந்தார். இந்த வீடியோ காட்சி முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே அமைச்சர் நாசருக்கு தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்திய வரலாற்றில் ஒரு அரசின் அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா. இதைத்தான் திமுக அரசின் அமைச்சர் சா.மு.நாசர் செய்திருக்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகின்றனர். கண்ணியம் இன்றி, நல்லொழுக்கமின்றி மக்களை அடிமைகள் போல் நடத்துவது தான் திமுக” என்று தெரிவித்துள்ளார்.