

பெண்களை மையப்படுத்தி எதிர்பாராத நேரத்தில் நடத்தப்படும் குற்றச் சம்பவங்களில் முக்கிய மானது நகைப்பறிப்பு. கோவையில் சமீப காலமாக நகைப்பறிப்பு குறைந்து வந்தாலும், அவை நூதனமாக நடத்தப்படுவது அதிகரித்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
கோவை மாநகரில் 2015 நவ.19-ம் தேதி பனைமரத்தூர் அருகே நகைப்பறிப் பின் போது மீனாட்சி என்ற பெண் கொலை செய்யப்பட் டார். மாநகர போலீஸில் நகைப் பறிப்பையும், வாகனத் திருட்டையும் தடுக்க தனிப்படைகள் இயங்கி வந்தாலும், இந்த கொலைக்குப் பிறகே, அவற்றின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் நகைப்பறிப்பு சம்பவங்கள் குறையத் தொடங்கி உள்ளன.
போலீஸார் தகவலின்படி, 2014-ம் ஆண்டு 100 நகைப்பறிப்பு வழக்கு கள் பதிவாகின. அனைத்திலுமே குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். 2015-ல் 97 வழக்குகள் பதிவாகி, அதில் 92 வழக்குகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில் நடப்பாண்டில் (2016, டிசம்பர் 2-வது வாரம் வரை) வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து 68 நகைப்பறிப்பு வழக்கு கள் பதிவாகி உள்ளன. அதில் 62 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு நகைப்பறிப்பு வழக்குகள் குறைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக அதிகம்
நகைப்பறிப்பு வழக்குகள் குறைந்து வருவதாக கூறப்பட்டா லும், ஒட்டுமொத்த கொள்ளைக் குற்றங்களில் நகைப்பறிப்புச் சம் பவங்களே முன்னிலையில் இருந்து மக்களை அச்சுறுத்துகின்றன.
சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி, ரத்தினபுரி காவல்எல்லைகளே அதிக நகைப்பறிப்பு குற்றங் கள் நடக்கும் பகுதிகளாக கண்ட றியப்பட்டுள்ளன. கோவையில் 2016-ல் நடந்த 80 கொள்ளைச் சம்பவங்களில் 68 நகைப்பறிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
அதாவது ஒட்டுமொத்த கொள்ளைச் சம்பவங்களில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு நகைப்பறிப்புகள் உள்ளன. எனவே நகைப்பறிப்பைக் குறைக்கவும், அதில் இருந்து பெண்களைக் காப்பாற்றவும், இக்குற்றத்தைத் தடுப்பதற்கான தனிப்படையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.
போலீஸாரின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தீவிரமடைந்துள் ளதோ, அதே அளவுக்கு குற்றச் செயல்களும் நூதனமாகி வருகின் றன. அந்த வகையில், கோவையில் கடந்த ஓர் ஆண்டில் போலீஸாரின் பெயரில் நடந்த நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் உள்ளன.
மூதாட்டிகளைக் குறிவைக்கும் இந்த கும்பல், தங்களை போலீஸார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கலவரம் நடப்பதாக அவர்களை அச்சமூட்டி, நகைகளை பாதுகாப் பாக காகிதத்தில் வைத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றுகின்றனர். இதில் கைரேகைகள், வாகன எண்கள் என எந்த வகையான துப்பும் கிடைப்பதில்லை என்பதால் உண்மையான போலீஸாருக்கு சிரமத்தைக் கொடுக்கின்றன.
அதிவேக வாகனங்கள்
மாநகர துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) லட்சுமி கூறிய தாவது: நகைப்பறிப்புக் குற்றங் களில் கைரேகை, பழைய குற்ற வாளிகள் பட்டியல் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. எளிதில் நகையை பறித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் பலர் இக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் இறுதியில் ஆபத்தான விளைவையே அது ஏற்படுத்து கிறது. நகைப்பறிப்பும் ஒரு வகை கொள்ளைதான் என்றாலும் கூட, மற்ற குற்றங்களைக் காட்டிலும் அதிக ஆபத்தானது. திட்டமிடல் ஏதும் இல்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதால், அப்போதைய சூழலே விளைவுகளைத் தீர்மானிக்கிறது. பல நேரங்களில் அந்த விளைவுகள் மோசமாக இருக்கும்.
எனவே முதலில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் தனியே செல்வது, தேவையற்ற நேரங்களில் நகைகளை அணிந்து செல்வது, இருள் சூளும் அதிகாலை, இரவு நேரங்களில் கவனக்குறைவுடன் வெளியே நகைகளை அணிந்து செல்வது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புதிய ரக அதிவேக இருசக்கர வாகனங்களின் வருகையால், நகைப்பறிப்புகள் அதிகமாகி உள்ளன. அதிலும் போலியான வாகன எண்களை ஒட்டிக் கொள்வதால், சம்பந்தப்பட்ட வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் மூலம், வாகனத் தணிக்கைகளை செய்து கடும் நடவடிக்கை எடுக்கிறோம். அதனால் பெருமளவில் நகைப்பறிப்பு குற்றங்கள் குறைந்துள்ளன. போலீஸாரின் பெயரில் நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
நூதனமான நகைப்பறிப்பைத் தடுக்க, தனிப்படையை விரிவுபடுத்தி, நவீன கண்காணிப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது