Published : 25 Jan 2023 04:17 AM
Last Updated : 25 Jan 2023 04:17 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வானகிரி கிராமத்தில் காவிரி ஆற்றின் தடுப்பணை அருகே தனியார் மீன் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நேற்று தருமகுளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வானகிரி கிராம மக்கள், பல்வேறு விவசாய சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் தருமகுளம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் பி.ஜி.ராஜதுரை தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவிரி வே.தனபாலன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியது: வானகிரி கிராமத்தில் காவிரி தடுப்பணை அருகில் மீன் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக பொதுப்பணித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும்.
ஏற்கெனவே இறால் குட்டைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறியுள்ள நிலையில், அரசால் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் நிலத்தடி நீர் சீராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதன் அருகில் மீன் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும்.
எனவே, மீன் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் தருமகுளம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூம்புகார் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT