

திருச்சி: ஜல்லிக்கட்டு குறித்த கவிஞர் தாமரையின் கருத்துக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழர்களுக்குத் தேவையில்லை. அதை வன்கொடுமையாகக் கருதி, தடை செய்ய வேண்டும் என கவிஞர் தாமரை சமூக வலை தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில இளைஞரணித் தலைவர் டி.ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜல்லிக்கட்டை வன்கொடுமை என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம், அவரது அறியாமையைக் காட்டுகிறது. டன் கணக்கில் எடையைச் சுமந்து செல்லும் காளையை, 80 கிலோ எடையுள்ள வீரர் அடக்குவது எந்த விதத்திலும் கொடுமையோ, வன்முறையோ ஆகாது.
தமிழகத்தில் நிகழாண்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் தனது விஷம பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இ்ல்லாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.