

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்களான நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இடம் பெற்றிருந்த பாடத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. இது காலம் தாழ்த்தப்பட்ட நடவடிக்கை என்றாலும் இது வரவேற்கத்தக்கது. பாமக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக நாடார் சமுதாயம் குறித்த அவதூறு கருத்துகள் அடங்கிய காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தை 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இருந்து நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆணையிட்டிருக்கிறது.
இந்த பாடத்திலிருந்து வினாக்கள் எழுப்பப்படக் கூடாது என்றும் ஆணையிட்டிருக்கிறது. இது பாமகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந் நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வர லாற்றை மத்திய மற்றும் மாநில பாடத்திட்ட நூல்களில் ஒரு பாட மாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.