Published : 25 Jan 2023 03:52 AM
Last Updated : 25 Jan 2023 03:52 AM

இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி - மானியம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய ரகமான மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடியில் விவசாயி மோகன்.

திருவண்ணாமலை: இயற்கை விவசாயத்துக்கு அரசாங்கம் மானியம் உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கப்படும், பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும், அதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகளிடம் மேலோங்கி உள்ளன. அதே நேரத்தில் அரசாங்கத்தின் தயவை எதிர்பார்க்காமல், இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதில் ஒரு சில விவசாயிகள், ஆங்காங்கே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை தேடி சென்று பெற்று சாகுபடி செய்கின்றனர்.

இயற்கை விவசாய வழிதடத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் விவசாயி மோகன் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். தனக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும், அனைத்து பயிர்களுக்கும் இயற்கை உரங்களை இட்டு சாகுபடி செய்கிறார். 4 ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய ரகமான மாப்பிள்ளை சம்பா உற்பத்தி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நீரிழிவு பாதிப்பில் இருந்து பாதுகாப்பது போன்ற பல்வேறு நோய்களில் இருந்து விடுபடுவதற்கு அருமருந்தாகவும் மாப்பிள்ளை சம்பா விளங்குகிறது.

இது குறித்து இயற்கை விவசாயி மோகன் கூறும்போது, “இயற்கை உரம் பயன்படுத்தி பாரம்பரிய ரகமான மாப்பிள்ளை சம்பா அரிசியை கடந்த 4 ஆண்டுகளாக உற்பத்தி செய்கிறேன். மண்ணை வளப்படுத்த சணப்பை, தக்கைபூண்டு, அவுரி, உளுந்து, பச்சை பயிர் ஆகியவற்றை கொண்டு கலப்பின பயிராக விதைத்து 3 மாதங்கள் வளர்க்கப்படும். சுமார் 4 அடி உயரம் வளர்ந்துவிடும். பூப்பூக்கும் சமயத்தில், நிலத்திலேயே உழவு செய்யப்படும். இதன்மூலம் நிலத்துக்கு தழை சத்து கிடைக்கும். மேலும் நாட்டு பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியத்தை கொண்டு பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தயாரித்து நிலத்துக்கு பயன்படுத்துகிறேன். ரசாயன உரத்தை பயன்படுத்துவது கிடையாது. ஒரு பிடி யூரியாவை கையில் பிடித்து 17 ஆண்டுகளாகிறது.

மகசூல் குறைவாக கிடைக்கும் ரகம். அதே நேரத்தில் சந்தையில் வரவேற்பு உள்ளதால் உரிய விலை கிடைக்கிறது. இதன் தன்மையை மக்கள் உணர்ந்து வாங்க தொடங்கினால், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஆலைக்கு கொண்டு சென்று கைக்குத்தல் முறையில் உரித்து கொண்டு வருகிறோம். இயற்கையான எண்ணெய் தன்மை, அரிசியில் இருக்கும். பாலிஷ் செய்யபடாதது. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பிரபல அங்காடிகளில் ஒரு கிலோ மாப்பிள்ளை சம்பா ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர். ஆனால், இயற்கை முறையில் தயாரித்து, ஒரு கிலோ அரிசி நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீரிழிவு பாதிப்புக்கு அருமருந்து. கணையத்தை பாதுகாக்கும். மூன்று வேளையும் மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை விவசாயத்தின் மூலம் மலட்டு தன்மையில் இருந்து விவசாய நிலம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை விவசாயத்துக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும். விதைகள் கிடைக்காமல், சில நேரங்களில் அலைகிறோம். தக்கைபூண்டு, சணப்பை, அவுரி உள்ளிட்டவற்றை இலசமாக வழங்க வேண்டும். பாரம்பரிய ரக நெல் விதைகளை வழங்கினால் உதவியாக இருக்கும். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து அரிசியை கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x