குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் ‘நம்ம கிராமசபை’ என்கிற கணினி/தொலைபேசி மென்பொருள் மூலம் கிராம சபை நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த குடியரசு தினத் திருநாளில் சுதந்திரத்திற்காக உழைத்த நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து ஊராட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியினை ஏற்றிட வேண்டும். கிராம ஊராட்சிகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் முறையே அவர்களது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைப்பார்கள்.

ஜனவரி 26 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள் வெளியீடு, பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்கிற தலைப்புகளில் கூட்டப் பொருட்கள் உள்ளன.

ஊராட்சிகளின் 2022-23ஆம் ஆண்டிற்கு டிசம்பர் 2022 வரையிலான வரவு செலவு அறிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், “அனைவருக்கும் வீடு” கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக பணிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முதலானவை குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும்.

மேலும் கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் ‘நம்ம கிராமசபை’ என்கிற கணினி/தொலைபேசி மென்பொருள் மூலம் கிராம சபை நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.குடியரசு தினத்தன்று நடைபெறும் உங்கள் ஊர் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in