

ஈரோடு வனப்பகுதிகளில் மாவோ யிஸ்ட் நடமாட்டம் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என எஸ்பி சிவக்குமார் தெரிவித்தார்.
கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை ஒடுக்க, அம்மாநில அரசு கடுமையான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இதனால், மாவோயிஸ்டுகள் கோவை மற்றும் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளுக்குள் நுழைந்து, தங்கள் செயல்பாட்டை தொடர வாய்ப்புள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் இரு மாவட்டங்களிலும் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதிகளையொட்டியுள்ள கிராமங்களில் வனத்துறையுடன் இணைந்து பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வனப்பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பின், அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு எஸ்பி சிவக்குமார் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட வனப்பகுதி களில் மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸலைட்டுகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை பெறும் வகையில் தாளவாடி, பர்கூர். ஆசனூர் மலைப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் குறித்து தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். இத்துடன், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் நிறைவேற்றி வருகிறோம். ஈரோடு வனப்பகுதியில் மாவோ யிஸ்ட் மற்றும் நக்ஸல்களின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் வகையில் ஏடிஎஸ்பி மோகன் நவாஸ் தலைமையில் சிறப்பு நக்ஸல் தடுப்புப்பிரிவு அமைக் கப்பட்டுள்ளது.
இப்பிரிவினர் அதிரடிப்படை யுடன் இணைந்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் இதுவரை மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங் களிலும் முதல் தகவல் அறிக்கை உடனுக்குடன் ஆன்லைன் மூலம் வெளியாகிறது.
புகார்தாரருக்கு வழங்கப்படும் ரசீது எண் (சி.எஸ்.ஆர்) மற்றும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத் தையும் குறிப்பிட்டால் முதல் தகவல் அறிக்கையின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.