சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு தேர்வு: அடுத்தடுத்த இடங்களில் திருச்சி, திண்டுக்கல்

சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு தேர்வு: அடுத்தடுத்த இடங்களில் திருச்சி, திண்டுக்கல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தினத்தன்று ‘தமிழக முதல்வர் கோப்பை’ வழங்கப்படும். இதற்காக காவல் துறை அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்வார்கள்.

மேலும், குற்ற வழக்குகளில் துப்பு துலக்கியது, குற்றவாளிகளைக் கைது செய்தது, தண்டனை பெற்றுத் தந்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தது, பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொண்டது, காவல் நிலையத்தில் சுகாதாரம் - தூய்மையைப் பேணிக்காப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடப்படும்.

அதன்படி, கடந்த ஒரு மாதமாக காவல் துறை அதிகாரிகள் தமிழகம்முழுவதும் சென்று, சிறந்த காவல்நிலையங்களுக்கான தரவரிசைப் பட்டியலை சேகரித்தனர். இந்நிலையில் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி, தமிழகத்தில் 2021-ம்ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தை திருச்சி மாவட்டம் கோட்டை காவல் நிலையம், 3-ம் இடத்தை திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் ஆகியவை பெற்றுள்ளன.

முதல்வர் கோப்பையை வழங்குவார்

இந்த காவல் நிலையங்களுக்கு தமிழக முதல்வரின் கோப்பை, குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

சென்னையைப் பொறுத்தவரை வடக்கு மண்டலத்தில் வண்ணாரப்பேட்டை, மேற்கு மண்டலத்தில் திருமங்கலம், கிழக்கு மண்டலத்தில் நுங்கம்பாக்கம், தெற்கு மண்டலத்தில் அடையாறு காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சங்கர் நகர் காவல்நிலையம் (தாம்பரம்), செங்குன்றம்(ஆவடி), பீளமேடு சட்டம்-ஒழுங்கு(கோவை), சூரமங்கலம் (சேலம்),எஸ்.எஸ்.காலனி (மதுரை), நெல்லை டவுன் காவல் நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

3 ஆயிரம் போலீஸாருக்கு விருது

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஜிபி சைலேந்திர பாபு நாளை (ஜன.25) வெளியிட உள்ளார். இதேபோல, காவல் பணியில்10 ஆண்டுகள் வரை எந்த தண்டனையும் பெறாமல் பணியாற்றுவோருக்கு முதல்வர் விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு 3,000 போலீஸார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in