Published : 24 Jan 2023 06:52 AM
Last Updated : 24 Jan 2023 06:52 AM

அனைத்து மொழிகளிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதியின் கருத்துக்கு வரவேற்பு

சென்னை: மகாராஷ்டிரம் - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதற்காக, தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.

அதேபோல், உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றநமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது, நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற இந்திய தலைமை நீதிபதியின் அறிவிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இதனை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருத்தை வரவேற்கிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழக்குதொடுக்கும் பாமர மக்கள் அறிந்துகொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கெனவே 2019-ம் ஆண்டுஜூலை 17-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டு விட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்யவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மாநில மொழிகளில் தீர்ப்புகள் வழங்குவது குறித்து நீதிபதி தெரிவித்த யோசனையை பிரதமர் வரவேற்று, பாராட்டியிருக்கிறார். இந்தியாவில் ஏராளமான மொழிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் வெளியிடப்படும் தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவரவர் சார்ந்த மாநில மொழியிலும் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்ச நீதிமன்றமும், மத்தியஅரசும் நிறைவேற்ற வேண்டும்.

இந்த நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், சட்டபேரவையில் தமிழக அரசு தீர் மானம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x