

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், மநீம தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திமுக கூட்டணி தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து வாழ்த்துபெற்றார். இடைத்தேர்தலில் திமுகவின் ஆதரவையும் கோரினார். பிரச்சாரத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,டி.ஆர்.பாலு எம்.பி., சட்டப்பேரவைகாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, மாநில துணைத்தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கொமதேக தலைவர் ஈஸ்வரன் ஆகிய கூட்டணி கட்சித் தலைவர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரையும் சந்தித்து இளங்கோவன் ஆதரவு கோரினார். தொகுதியில் பிரச்சாரத்துக்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனையும் இளங்கோவன் நேற்று சந்தித்துஆதரவு கோரினார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்த பிறகு, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். அப்போது, விஜய்வசந்த் எம்.பி., அசன் மவுலானா எம்எல்ஏ, காங்கிரஸ் மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் எஸ்.காண்டீபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘‘கமலையும், காங்கிரஸையும் பிரிக்க முடியாது. அவர் நிச்சயம் ஆதரவு தருவார், பிரச்சாரத்துக்கு வருவார் என்றும் நம்புகிறேன். அதிமுக 4 ஆகபிரிந்திருக்கிறது. அவர்கள் பாஜகவை போட்டியிட வைப்பார்கள். முதல்வர் ஸ்டாலினின் சாதனை ஆட்சி எனக்கு வெற்றியை பெற்றுத் தரும்’’ என்றார்.
‘‘கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். மநீம வேட்பாளர் 10,005 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார்.
இடைத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், தனது வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே கமல்ஹாசனிடம் இளங்கோவன் ஆதரவு கோரியுள்ளார்’’ என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாஜக நிலைப்பாடு
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தல் என்பது ஒருகட்சியின் பலம், வளர்ச்சியை பார்ப்பதற்கான அளவுகோல் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும். அப்படியான கட்சியில் நிற்பவர், மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 3 திமுக அமைச்சர்கள் உள்ளனர். எனவே, இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்கள்.
எங்கள் கூட்டணியில் வேட்பாளர்யார் என்பது குறித்து, கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக முடிவெடுக்கும். ஈரோட்டில் இருந்துஅதிமுக சார்பில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள், அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆளும் கட்சியின் பண பலம், படைபலம், அதிகார பலத்தை எதிர்க்கக்கூடிய ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும். அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் அனைவரும் துணை நிற்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.