

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் மண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் மயிலேறு திருவிழா வெகுவிமர்சையாக நடப்பதும் இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம்.
அதன்படி, மயிலேறு தினமான நேற்று முன்தினம் கோயில் திருவிழாவெகுவிமர்சையாக நடைபெற்றது. இரவு 8.30 மணியவில் பக்தர்கள் 10 பேர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கிரேனில் தொங்கிய படி, அம்மனுக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்தனர்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக பக்தர்கள் ஆகாயத்தில் தொங்கியபடி சென்ற கிரேன் திடீரென சாய்ந்து விழுந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் கூட்டம் நாலாபுறமும் சிதறி ஓடியது.
இந்த விபத்தில் கீழ்வீதியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி பூபாலன்(40), முத்துக்குமார்(39), பிளஸ் 2 மாணவன் ஜோதிபாபு(16) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலறிந்த நெமிலி போலீஸார் மற்றும் பொதுமக்கள், படுகாயமடைந்த கீழ்வீதியைச் சேர்ந்த சூர்யா(22), கஜேந்திரன்(25), ஹேமந்த்குமார்(16), அருணாசலம்(45), அருண்குமார்(25), திருத்தணியைச் சேர்ந்த கதிரவன்(23) ஆகிய 6 பேரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், இருவர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரப்பேரியைச் சேர்ந்த சின்னசாமி (76) என்ற முதியவர் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஓட்டுநரான பனப்பாக்கம் முருகன் என்பவரை கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்.பி. டாக்டர் தீபாசத்யன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
டிஐஜி முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவிழா காவல் துறையினர் அனுமதி பெற்று நடத்தப்பட்டது. இருப்பினும். கிரேன் சென்ற சாலை சரியாக இல்லாத காரணத்தினால் எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் சிக்கியவர்கள் படுகாயமடைந்து 4 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது துரதர்ஷ்டவசமானது" என்றார்.
இவ்விபத்து குறித்து தக்கோலத்தில் நடந்த அழகுராஜா கோயில் புனரமைப்பு பணி தொடக்கவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல், தனியார் குழுவினரால் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இனி வரும் காலங்களில் இதுபோன்று விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படும்" என்றார்.
இந்நிலையில், அவர்களின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. இதில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரில் சென்று அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினர்.