Published : 24 Jan 2023 04:03 AM
Last Updated : 24 Jan 2023 04:03 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில் வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தல்

ஈரோடு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலை சந்திப்புகளில், வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும். சோதனை முழுவதையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.

தனி நபர் ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்புடைய பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

வங்கிப்பணிக்காக பணம் எடுத்துச் செல்லும்போது, உரிய அனுமதி கடிதம் வைத்திருப்பதோடு, வாகனத்தில் உள்ள அனைவரும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ம் தேதி வரை பறக்கும் படையினரின் பணி நீடிக்கும். அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எந்தவிதமான சுவர் விளம்பரங்கள் செய்யவும் அனுமதி கிடையாது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளில் உள்ள கொடிகள், சின்னங்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை மறைக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் கூட்டம், ஊர்வலம் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

மதவழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு வேட்பாளருக்கு மொத்தம் 3-வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பிரச்சாரத்தின் போது அனுமதியில்லாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

வாக்குக்காக பணம் வாங்குவதோ, கொடுப்பதோ சட்டப்படி குற்றம் என விளம்பரப்படுத்த வேண்டும், என்றார். தொடர்ந்து, நகை மதிப்பீட்டார்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஈரோடு எஸ்பி வி.சசிமோகன், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x