

சேலம்: ஏற்காட்டில் மழைவாழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான தார் சாலை அமைக்காததைக் கண்டித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற 18 கிராம தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட செந்திட்டு கிராமத்தில் சாலை வசதிகோரி 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 150 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் சாலையை தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் கொட்டச்சேடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேனாங்குழி முதல் லட்சுமி எஸ்டேட் மற்றும் சேர்வராய்ஸ் ஆறாம் எண் ஃபீல்டு வழியாக கொட்டச்சேடு பகுதிக்கு இணைப்பு சாலை (2.45 கி.மீ.தூரம்) அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆறாம் எண் ஃபீல்டுக்கு பதிலாக ஏழாம் எண் ஃபீல்டு வழியாக சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சாலையால் மக்களுக்கு பயன் இல்லாமல் தனியார் எஸ்டேட் அதிபர்களுக்கே பயன் ஏற்படும் என மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, மக்கள் தேவைக்கு பயன்படக் கூடிய ஆறாம் எண் ஃபீல்டு வழியாக சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான சாலை பணியை நிறைவேற்றி கொடுக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து, வரும் 26ம் தேதி நடக்கவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஊர் கூட்டத்தில் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதில் செந்திட்டு, அரங்கம், பலாக்காடு உள்ளிட்ட 18 கிராம மக்களின் ஊர் தலைவர்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.