3 குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளி வைப்பு: கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் ராணுவ வீரர் புகார்

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 3 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பதாக ஆட்சியரிடம் ராணுவ வீரர் புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ண கிரியை அடுத்த சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார் (41), அவரது மனைவி பிரியங்கா (30) மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு விவரம்: கிருஷ்ணகிரியை அடுத்த சின்ன அக்ரஹாரத்தைச் சேர்ந்த மணியக்காரர் (ஊர் தலைவர்) மற்றும் சிலர் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

இதையடுத்து, கட்டப் பஞ்சாயத்து பேசியவர்களை அழைத்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும், எங்கள் குடும்பம் உட்பட 3 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். தற்போது, ஊர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்துக்கு தலா ரூ.500 வசூல் செய்தனர். இதில், எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களைத் தவிர்த்து விட்டனர்.

திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் செல்லும்போது மற்றவர்கள் எழுந்து சென்று விடுகின்றனர். எங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் பள்ளிகளில் கூட பேசுவதில்லை. பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை. எனவே, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in