Published : 24 Jan 2023 06:16 AM
Last Updated : 24 Jan 2023 06:16 AM
சென்னை: திருவொற்றியூர் கடற்பரப்பில் மூழ்கிய கல்லூரி மாணவ, மாணவிகளை அப்பகுதி மீனவர்கள் போராடி மீட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர், கே.வி.கே.குப்பம் கடற்கரை பகுதியில் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொது மக்கள்,இளைஞர்கள், இளம் பெண்கள் எனப் பலர் திரண்டு பொழுதைக் கழிப்பது வழக்கம். கடல் அலையால் மண் அரிப்புஏற்படாமல் இருக்க அப்பகுதி கடற்கரையில் ராட்சத பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மீது அமர்ந்தவாறு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பகுதி ஆழமாக இருப்பதாலும், கூர்மையான கருங்கற்கள் நிரம்பி இருப்பதாலும் இங்குள்ள கடற்பரப்பில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் பலர் தினமும் குளித்து வருகின்றனர். இதில், உயிர் இழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன.
ஆபத்தை உணரவில்லை
இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை3 இளைஞர்கள் 3 இளம் பெண்களுடன் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் கடற்கரை பகுதிக்குச் சென்றனர். அவர்கள் கரையோரத்தில் கற்கள் குவிக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
பின்னர் ஆபத்தை உணராமல் 2 பெண்கள் உட்பட 4 பேர் கடலில் இறங்கிக் குளித்தனர். அப்போது, ராட்சத அலையால் இளம் பெண்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடன்வந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.ஆனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர்.
மீனவர்கள் மீட்டனர்
அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மீனவர்கள் அங்கு திரண்டனர். அலையின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கற்கள் அதிகளவில் கொட்டப்பட்டு இருந்ததாலும் மீனவர்களால் கடலுக்குள் இறங்கி உடனடியாக காப்பாற்ற முடியவில்லை.
வலைகள், கயிறுகளைமூழ்கியவர்களை நோக்கி வீசுவதிலும் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு கடலில் தத்தளித்த 4 பேரும்பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவ, மாணவிகள் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT