Published : 24 Jan 2023 06:09 AM
Last Updated : 24 Jan 2023 06:09 AM
சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரம் கொண்ட டவர் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே அவசர தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கி முறை கடந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டில் உள்ளது. இந்த சேவை, அனலாக் அலைவரிசை முறையில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் இணைப்புகள் கிடைக்காமலும், கிடைத்தாலும் தெளிவாக இல்லாமல் இருந்து வருகிறது.
குறுகிய தூரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடிவதால், இந்திய விமான நிலைய ஆணையம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதனால், டிஜிட்டல் வடிவில் டிஎம்ஆர் எனப்படும் டிரங்க்ட்ரேடியோ சேவை என்ற நவீனதகவல் தொழில்நுட்ப வசதியைச்செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, சென்னை விமான நிலையத்தில் 135 அடி (40 மீட்டர்)உயரத்துக்கான தகவல் தொடர்பு கோபுரம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தகவல்தொழில்நுட்ப சேவை சென்னை விமான நிலையத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: புதிய தகவல் தொழில்நுட்பம் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை விமான நிலையத்தை மையமாக வைத்து சுற்றிலும் உள்ள 6 கி.மீ. தொலைவு வரை வாக்கி டாக்கி சேவையைப் பயன்படுத்த முடியும்.
டெட்ரா என்ற ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் முழுவதும் டிஜிட்டல் வடிவில், இந்த புதிய தொலைத்தொடர்பு சேவை இருக்கும். விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குதல், புறப்படுதல் பகுதியில் ஓடுபாதையில் பணியில் உள்ள கிரவுண்ட் ஸ்டார்கள் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சேவையைப் பயன்படுத்த முடியும்.
இவர்களின் வாக்கி டாக்கி பேச்சுகளை, வெளியாட்கள் யாரும் ரகசியமாக ஓட்டு கேட்க முடியாது. இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையங்களிலும், இந்த புதிய தகவல் தொழில்நுட்பம் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில்தான் முதல்முறையாக ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT