Published : 24 Jan 2023 05:49 AM
Last Updated : 24 Jan 2023 05:49 AM

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் மரியாதை

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள். படம்: பு.க.பிரவீன்.

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை ஒட்டி தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.பரந்தாமன், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது ஆளுநர் பேசியதாவது:

இந்திய தேசிய ராணுவத்தில் தனது சிறந்த பங்களிப்பையும், துணிச்சல் மிகுந்த பணிகளையும் மேற்கொண்டு தலைமை தாங்கி இந்தியாவின் சுதந்திரத்துக்காக வழிநடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை `ஆசாதி கா அம்ரித்மகோத் சவ்' என்ற பெயரில் கொண்டாட மோடி அறிவுறுத்தினார். நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இருப்பார். நாம் கட்டாயம் நமதுநாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களைச் சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், அரசியல் தலைவர்கள் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆங்கிலேயருக்கு எதிராக வீரமிகுந்த இளைய சமுதாயத்தை ஒன்று திரட்டி, இந்திய ராணுவத்தை கட்டமைத்து, தாய் நாட்டின் விடுதலைக்காக வீரப் போர்புரிந்த வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவர்தம் துணிச்சலையும், வீரத்தையும் போற்றுவோம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிரான நமது சுதந்திரப் போரட்டத்துக்கு வீரியம்தந்த தேசபக்தர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

டிடிவி தினகரன்: தாய்நாட்டின் மீது கொண்ட நேசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து, இந்திய மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர் நேதாஜியின் தீரத்தையும் தியாகங்களையும் வணங்குவோம்.

சமக தலைவர் சரத்குமார்: இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்ற வேட்கையுடன் இந்திய ராணுவத்தைக் கட்டமைத்த துணிச்சல் மிகு எழுச்சியாளர் நேதாஜி பிறந்தநாளில் வணங்குகிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீரத்தைப் போற்றுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x