Published : 24 Jan 2023 06:57 AM
Last Updated : 24 Jan 2023 06:57 AM
சென்னை: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டதன் நினைவாக, தமிழக அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், அருங்காட்சியகம், நூலகம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும், அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, இந்த நினைவகத்தில் கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, சமூக நீதி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரியார் நினைவகத்தில் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.
பின்னர், அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் நடத்திய போராட்டத்தின் நினைவுகளைப் போற்றும் வகையிலும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் போராட்டம் குறித்து தெரிவிப்பதற்காகவும் இந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநினைவகத்தின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர்ஸ்டாலின் எங்களை அனுப்பினார்.
இதைப் புனரமைக்கலாமா, புதிதாக கட்டலாமா என்பது தொடர்பாக அதிகாரிகளைக் கொண்டுஆய்வு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நினைவகத்தின் தற்போதையை நிலையை முதல்வரிடம் எடுத்துரைப்போம். பின்னர் அவர் இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாதன், தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன், தலைமைக் கட்டிடக் கலைஞர் மைக்கேல் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT