Published : 24 Jan 2023 07:03 AM
Last Updated : 24 Jan 2023 07:03 AM

எம்ஏஎம் ராமசாமி வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

சென்னை: தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமியின் செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஏ.சி.முத்தையா, 2016-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எம்ஏஎம் ராமசாமி செட்டியாரின் தந்தையும், எனது தந்தையும் சகோதரர்கள்.

எம்ஏஎம் ராமசாமி 1996-ல் ஐயப்பன் என்பவரை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார். ஆனால், நகரத்தார் சமூகத்தின் பாரம்பரியக் கட்டுப்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மயிலாப்பூர் வட்டாட்சியர் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். இது சட்ட விரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி என்.சதீஷ்குமார், "வளர்ப்புமகனாகத் தத்து எடுக்கப்பட்டுள்ள ஐயப்பனுக்கும், எம்ஏஎம் ராமசாமிக்கும் உள்ள உறவு முறைக்காக வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏ.சி.முத்தையா, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஐயப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எம்.கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் டி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி, "வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை தரப்பில் இந்த வழக்கைத் தொடர முடியாது. தத்து எடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடருவதற்கான காலவரையறையும் கடந்துவிட்டது. தத்து எடுப்பது என்பது தனிப்பட்ட உரிமை. அதை எதிர்த்து மூன்றாவது நபர்கள் வழக்குத் தொடர எந்த உரிமையும் இல்லை" என்று வாதிட்டனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனுதாரரான ஏ.சி.முத்தையா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.னிவாஸ் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x