

திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால், மா, வாழை, கொய்யா, எலுமிச்சை, காய்கறி உள்ளிட்ட 3,960 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதில் 2,700 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வார்தா புயலால், திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், பல ஆயிரம் மாமரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏக்கருக்கு 50 ஆயி ரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், கும் மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பூண்டி, திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மாந்தோப்பு கள் உள்ளன.
இதில், கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட ஆரம்பாக்கம், பாதிரிவேடு, பூவலை, நாயுடுகுப்பம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள என்.எம். கண்டிகை, புதுகுப்பம் தாஸ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் மா சாகுபடி நடக்கிறது.
ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் சுமார் 200 மரங்கள் என்ற ரீதியில், ஆயிரக்கணக்கான மாமரங்கள் உள்ளன. பெரும்பாலான சிறு விவசாயிகளுக்கு சொந்தமான இந்த தோப்புகள் மூலம் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் பலனடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கடுமையாக வீசிய வார்தா புயலால் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,700 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மாந்தோப்புகளில் ஆயிரக்கணக்கான மாமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் புயலுக்குத் தாக்குப்பிடித்து நின்ற மரங்களிலும் பூக்களும் உதிர்ந்ததால் சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டில் ஒரு ஹெக்டேர் மாந்தோப்பில் சுமார் ரூ.2 லட்சம் வருமானத்தை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதாவது: மாஞ்செடியின் துளிர் பருவம், பூ, பிஞ்சி விடும் நேரம், அரும்பு பருவம் என மாமரத்தின் எல்லா நிலைகளிலும் பார்த்து, பார்த்து வளர்த்து வந்த மாமரங்கள் வார்தா புயல் தாக்குதலில் ஒரே நாளில், ஒரு ஹெக்டருக்கு சுமார் 40 மரங்கள் என்ற அளவில் வேரோடு சாய்ந்தன. 60 ஆண்டுகள் வரை பலன் அளிக்கும் மரங்கள் நாசமானது, மா விவசாயிகளின் வாழ்வாரத்தைப் பாதித்துள்ளது.
எனவே, சேதமடைந்த ஒரு ஹெக்டர் மாந்தோப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால், மா மட்டுமல்ல, வாழை, கொய்யா, எலுமிச்சை, காய்கறி உள்ளிட்ட 3,960 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த சேதங்கள் குறித்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். அரசு நிர்ணயிக்கும் நிவாரணத்தை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.