Published : 24 Jan 2023 04:27 AM
Last Updated : 24 Jan 2023 04:27 AM
சென்னை: கரோனா பாதிப்பு நிலை இயல்புக்கு திரும்பியுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதற்கான வழிகாட்டுதல்கள் பின்பற்ற அவசியம் இருக்காது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான நிதி, பணியாளர்கள் தேவை உள்ளிட்டவை குறித்த விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: தற்போது முதல் கட்டமாக பதற்றமான வாக்குச்சாவடிகளின் விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளோம். தேர்தல் செலவுக்கான நிதி தொடர்பாக நிதித்துறை ஒப்புதல் பெறவேண்டியுள்ளதால், தேவை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளோம்.
இப்பணிகள் வேட்புமனுத் தாக்கலுக்கு முன் முடிக்கப்பட வேண்டும். கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது, கரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரே வளாகத்தில் துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, 600 வாக்காளர்கள் என்ற அளவில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டது.
தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையை கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்குதொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும், ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் கடந்த தேர்தலைவிட, வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT