

செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை யினால் குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் குப்பைகள் சாலைகளில் தேக்கமடைகின்றன. இதனால் நகரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் நிலை நகராட்சியாக கருதப்படும் செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகளில் 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினமும் நகரத்திற் குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உருவாகும் குப்பை களை அகற்றித் தூய்மைப்படுத்த, நகராட்சியில் 170 துப்புரவு பணி யிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், 121 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 49 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நகர பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், நகரத்தின் எந்த பகுதியின் சாலைகளிலும் குப்பை தேங்கியிருக்கின்றது. இதனைச் சமாளிக்க நகராட்சி நிர்வாகம் 11 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தது.
மேலும், தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.225 வழங்கப்படு கிறது. ஆனால், ஆட்கள் பற்றாக் குறை காரணமாக தனியார் நிறுவன மும் முறையாக குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடாததால், பணி களில் மெத்தனம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களும் குப்பைகளை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு தராததால், நகரத்தின் பல்வேறு முக்கிய சாலைகளிலேயே குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் சந்திரசேகர் கூறுகையில்,
“நகராட்சியில் துப்புரவு பணி யிடங்கள் காலியாக உள்ளதால் தான், 11 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனாலும், நகரப்பகுதியில் தூய்மையை காணமுடியவில்லை. மேலும், துப்புரவு பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதில், அதிகாரிகள் சரியான வழிமுறைகளைக் கையாள்வதில்லை. அதனால், எந்த பகுதிக்கு பணிக்கு செல்வதென்று தெரியாமல் துப்புரவு பணியாளர்கள் குழம்பி தங்கள் இஷ்டம் போல், பணிகளில் ஈடுபடுகின்றனர். அத னால், முக்கிய சாலைகளில் குப்பை கள் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசுகின்றன. எனவே, மண்டல நக ராட்சி இயக்குநரகம் செங்கல்பட்டு நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களுக்கு பணி யாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் பணியாளர்களை சரியான திட்டமிடுதலுடன் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு நகர் நல அலுவலர் செந்தில்குமார் கூறுகையில்,‘ “நகரபகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற பல்வேறு பகுதிகளில் 120 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நாள் ஒன்றுக்கு சேரும் 24 மெட்ரிக் டன் குப்பைகளில் 14 மெட்ரிக் டன் காய்கறி கழிவுகள்தான். இவைகளும் தமிழக அரசு அறிவித்துள்ள காய்கறி கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் திட்டம் செயல்படும் பட்சத்தில், முற்றிலும் அகற்றப்படும். குப்பைகள் அகற்றும் பணிகளில் ஈடுபடும் தனியார் பணியாளர்களுக்கு, பணிக்கு வராத நாட்களில் பெனால்டி விதித்து, ஒப்பந்ததாரரிடம் வழங்கப்படும் தொகையில் பிடித்தம் செய்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக குப்பைகளை அகற்றுவதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால், நகரபகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் நகரை தூய்மையாக வைத்துகொள்வதில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைத்திருந்தாலும் மக்கள் அதில் குப்பைகளை போடாமல், அதன் அருகே வீசிசெல்கின்றனர். அதனால், நகரபகுதியில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பணியாளர்கள் பற்றாக்குறையினாலும் குப்பைகள் அகற்றும் பணிகளில் சிறிது மெத்தனம் காணப்படலாம். தினமும் மேற்பார்வையாளரகள் மூலம் பணியாளர்களை கண்காணித்து குப்பைகளை அகற்றி வருகிறோம். சேகரிக்கப்படும் குப்பைகளை நகரப்பகுதியின் வெளியே உள்ள தூக்குமரக்குட்டை எனப்படும் பகுதியில் கொட்டி தரம்பிரித்து அழித்து வருகிறோம்” என்றார்.