Published : 25 Dec 2016 02:46 PM
Last Updated : 25 Dec 2016 02:46 PM

பண மதிப்பு நீக்க அறிவிப்பு; சாமானிய மக்கள் மீதான துல்லியத் தாக்குதல்: பொருளாதார நிபுணர் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்கம் என்பது சாமானிய மக்களின் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் என்று, பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசினார்.

‘பண மதிப்பு நீக்கம் சரியா, தவறா’ என்ற தலைப்பில், சிறுதொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் திருப்பூரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

இதில் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசும்போது, “பிரதமரின் பண மதிப்பு நீக்க அறிவிப்பு, கறுப்பு மற்றும் கள்ளப் பண ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுப்பது, லஞ்ச, ஊழலை ஒழிப்பது ஆகிய 4 நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுமா என கேள்வி எழுப்பினாலே, தேசத் துரோகி என முத்திரை குத்துகின்றனர்.

ஊழல் என்பது அரசுத் துறை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; தனி யார் துறையும் தொடர்புடையது தான். லாபம் ஈட்டும் நடவடிக்கை களில் வாய்ப்பு இருக்கும் வரை ஊழல் தொடரும். அதிர்ச்சியூட்டும், அச்சம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மூலமாக ஊழலை ஒழிக்க முடியாது.

பங்குச்சந்தையில் பங்கேற்புப் பத்திரத்தை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதிகளுக்கான பணப் பரிமாற்றத்தை நிறுத்த முடியாது. கள்ளப் பணம் 0.028 சதவீதம்தான். கறுப்புப் பணம் என்பது கறுப்புச் சொத்துகள். இதில் ரொக்கப் பணமாக இருப்பு வைத்திருப்பது 5 அல்லது 6 சதவீதம்தான்.

எதிர்காலத்தில் உருவாகக்கூடிய கறுப்புப் பணத்தை ஒழிக்க, தொடர் நடவடிக்கைகள் தேவை. கறுப்பு, வெள்ளை பணத்துக்கு இடையே சீனப் பெருஞ்சுவர் ஏதுமில்லை. லாபம் ஈட்டியதற்கு வரி செலுத்தாமல்விட்டாலே கறுப்புப் பணம் உருவாகும்.

கடந்த 45 நாட்களில் அரசு கூறியது நடக்கவில்லை. சுமார் ரூ.15 லட்சம் கோடி ரொக்கப் பணம் வங்கிக்கு வந்துள்ளது. கறுப்புப் பணம், வெள்ளை ஆக்கப்பட்டுள்ளது. மக்களின் பணம், இப்போது மக்களிடம் இல்லை.

கறுப்புப் பணம் யாரிடம் இருக்கிறது என்பது அரசுக்கோ, பிரதமருக்கோ தெரியாத விஷயமல்ல. ஆனால், சாமானிய மக்களின் மீது துல்லியத் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில், அரசின் மீது மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகி உள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் ஆலை மூடல், நடைமுறை மூலதனம் இல்லை, சம்பளம் தர முடியவில்லை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொழில்முனைவோர், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 50 நாட்களில் மட்டும் நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று, சிஎம்ஐஇ என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 46 சதவீத பேருக்குதான் வங்கிக் கணக்கு உள்ளது. அதிலும் பெண்களில் 20 சதவீத பேரிடம்தான் உள்ளது. 77 சதவீத ஏடிஎம் இயந்திரங்கள் நகரங்களில்தான் இருக்கின்றன.

நாடு முழுவதும் இணையதளம் உள்ளிட்ட போதிய கட்டமைப்பு வசதி இல்லை. எனவே, அரசு சொல்லக்கூடிய பணமில்லா பொருளாதாரம் உடனடியாக ஏற்படக்கூடியதல்ல. மொத்தத்தில், அரசின் நடவடிக்கை மக்கள் மீது வீசப்பட்டிருக்கும் ‘கார்ப்பரேட் பாமிங்’ என்ற ‘பெரு நிறுவனங்களின் குண்டுவீச்சு’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் மற்றும் தொழில் வர்த்தகத் துறை பிரமுகர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x