ராமமோகன் ராவ் பினாமி நிறுவன ஒப்பந்தங்களை ரத்து செய்க: ராமதாஸ்

ராமமோகன் ராவ் பினாமி நிறுவன ஒப்பந்தங்களை ரத்து செய்க: ராமதாஸ்
Updated on
2 min read

ராமமோகன் ராவின் பினாமி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ராமமோகன் ராவ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரங்கேற்றிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போதைப் பாக்கு விற்பனையை அனுமதிப்பதற்காக ஐ.பி.எஸ் அதிகாரிகள் கோடிகளில் லஞ்சம் வாங்கியிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமைச்செயலாளராக இருந்த ராமமோகன் ராவின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்த விசாரணையிலிருந்து தப்புவதற்காகவே ராமமோகன் ராவ் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமமோகன் ராவ் ஊழல்வாதி என்பதும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்கு அவகாசம் பெறவே மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.

மற்றொருபுறம் ராமமோகன் ராவின் ஊழல்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்வதற்கான ரூ.360 கோடி ஒப்பந்தம் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்திற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒப்பந்தம் இந்த மாதத்துடன் தான் முடிவடையும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒப்பந்தம் கிடைக்காது என்ற அச்சத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே அந்நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தத்தை ராமமோகன் ராவ் பெற்றுத் தந்திருக்கிறார். இந்த நிறுவனத்தை ராமமோகன் ராவின் மகன் விவேக்கும், அவரது உறவினரான பாஸ்கர் நாயுடுவும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), தென் மத்திய தொடர்வண்டித்துறை, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களையும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது மகனின் நிறுவனத்திற்கு ராமமோகன் ராவ் பெற்றுத் தந்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இவை தவிர பினாமி பெயர்களில் ஏராளமான நிறுவனங்களை ராமமோகன் நடத்தி வருவதாகவும், வெளி நாடுகளில் ஆடம்பரமான நட்சத்திர விடுதிகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் ராமமோகன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமல்ல. தமிழக முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், இவர்களின் மகன்களும் ராமமோகன் ராவ் மகனுடன் இணைந்து பல தொழில்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழகத்தையே கொள்ளை அடித்திருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு மே மாதமே போதைப்பாக்குகள் தடை செய்யப்பட்டன. ஆனாலும், தமிழகத்தில் அவை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆட்சியாளர்களுக்கு மட்டுமின்றி, காவல்துறை உயரதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகள் நிறுவனங்களில் சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு போதைப்பாக்கு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியது.

ஆனால், அப்போது தலைமைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு ஆணையராக இருந்த ராமமோகன் ராவ், ஊழல் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை காப்பாற்றினார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற ஜார்ஜ், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கும், உள்துறை செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதையும் மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழலையும், ஊழல்வாதிகளையும் காப்பாற்ற ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமானால் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், போதைப்பாக்கு ஊழலில் தொடர்புடைய இந்திய காவல் பணி அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு தலைமைச் செயலாளர் ஆணையிட வேண்டும். அத்துடன் ராமமோகனின் பினாமி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in