

சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனவரி 25-ம் தேதி பொதுக் கூட்டத்துக்கு அனுமதியளிக்க கோரி கோவை மாவட்ட அதிமுக மாணவரணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனவரி 25-ம் தேதி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்திற்கு கடந்தாண்டு வரை அனுமதியளிக்கப்பட்ட நிலையில், பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி ஜனவரி 7-ம் தேதியே மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை காவல் துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏகள் பலர் கலந்து கொள்ளும் இந்த பொதுக் கூட்டத்துக்கு அனுமதியளிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.