Published : 18 Dec 2016 03:29 PM
Last Updated : 18 Dec 2016 03:29 PM

உலகச் சிறுகதை வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைக்கு தனியிடம் உண்டு: எழுத்தாளர் பிரபஞ்சன் புகழாரம்

உலகச் சிறுகதை வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைக்கு தனியிடம் உண்டு என்று எழுத்தாளர் பிரபஞ்சன் புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத் துறை ஆகியவற்றுடன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து நடத்திய, தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பல்நோக்கு அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு செளடாம்பிகா கல்விக் குழுமத் தலைவரும், விழாக் குழுத் தலைவருமான எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். விழாக் குழுச் செயலாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான கவிஞர் நந்தலாலா வரவேற்றார்.

விழாவில் சிறுகதை தொடர்பாக பிரபஞ்சன் பேசியது:

உலக அளவில் 334 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்ச் எழுத்தாளர் போம் பெவல் முதல் சிறுகதையை எழுதினார். இதிலிருந்து தான் தொடங்கியது உலகச் சிறுகதை வரலாறு. தமிழில் முதன்முதலில், ஆறில் ஒரு பங்கு என்ற கதையை 1910-ல் பாரதியார் எழுதினார். ஆனால், தமிழ்ச் சிறுகதை வரிசையில் குளத்தங்கரை அரசமரம் என்ற பெயரில் முதலில் சிறுகதையை எழுதியவர் வ.வே.சு.அய்யர். அதன் நூற்றாண்டையொட்டியே இந்த விழா நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து புதுமைப்பித்தன், ஜானகிராமன், விந்தன் என தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

நூறாண்டுகளைக் கடந்துள்ள தமிழ்ச் சிறுகதை, உலகச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல என்றார்.

அளவு அல்ல பொருள்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியபோது, “எழுத்தாளர்களான நாங்கள் எல்லாவற்றையும் கதையாகத் தான் பார்க்கிறோம். மனிதகுலம் பிறந்த காலம் தொட்டே கதை இருக்கிறது. கதை இல்லையெனில் மனிதகுலம் இல்லை. ஆனால், கதை வேறு, சிறுகதை வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சிறுகதை என்பது அளவைப் பொறுத்தது அல்ல. அது எடுத்துக்கொள்ளும் பொருளைப் பொறுத்தது” என்றார்.

விழாவில், கதை மலர் என்ற நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட மருத்துவர் திருப்பதி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து உலகச் சிறுகதைகளின் வரிசையில் தமிழ்ச் சிறுகதை என்ற தலைப்பில் கவிஞர் அ.வெண்ணிலா, நூறாண்டு வரலாற்றில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் க.உதயசங்கர், தமிழ்ச் சிறுகதை உலகில் பெண் படைப்பாளிகள் என்ற தலைப்பில் தேன்மொழி, நாம் சொல்ல வேண்டிய கதைகள் என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா, பாஸ்கர் சக்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நூறாண்டு சிறுகதைகள் குறித்த காட்சி விளக்கத்தை ச.தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் த.பால்தயாபரன், தமிழாய்வுத் துறைத் தலைவர் விஜயராணி உள்ளிட்டோர் பேசினர்.

பரிசளிப்பு விழா…

தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, வேல ராமமூர்த்தி ஆகியோர் கதைகளைக் கூறினர். பின்னர், கி.பார்த்திபராஜாவின், மரி என்றொரு ஆட்டுக்குட்டி என்ற தலைப்பிலான நாடகம் நடைபெற்றது.

பரிசு பெற்றோர்…

சிறுகதைப் போட்டியில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர் அ.ஜான் டெல்பி, டாக்டர் சகுந்தலா கல்லூரி மாணவி எஸ்.காயத்ரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி செ.ரக்ஷந்தா, தூயவளனார் கல்லூரி மாணவர் அ.ஜான் பால், பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் ப.ரஞ்சித் ஆகியோர் முறையே முதல் 5 பரிசுகளைப் பெற்றனர்.

குறும்படப் போட்டியில் புஷ்பநாதன் ஆறுமுகம், கணேஷ்ராஜா, கே.அர்விந்த்குமார் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். ஆருத்ரா சரவணகுமார், கே.பிரகி ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x