

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.