Published : 23 Jan 2023 09:58 AM
Last Updated : 23 Jan 2023 09:58 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம்: அதிமுக அறிவிப்பு

அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப் படம்.

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்கள் இன்று முதல் விருப்ப மனு படிவங்களைப் பெறலாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 23.1.2023 திங்கள் கிழமை முதல் 26.1.2023 வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் அறிவிப்புடன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்கள் இன்று முதல் விருப்ப மனு படிவங்களைப் பெறலாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

போட்டிக்கு தயாராகும் ஓபிஎஸ்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. நான் ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் 2026-ம் ஆண்டு வரை செயல்படலாம் என்ற அங்கீகாரத்தை தொண்டர்கள் வழங்கியுள்ளனர்.

எனவே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழுஉரிமை இருக்கிறது. அதேநேரத்தில், இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டு, என்னிடம் விருப்பம் தெரிவித்தால், நிச்சயம் ஆதரவளிப்போம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலில்தான் திமுக ஆட்சி செய்து வருகிறது. எனவே, இடைத்தேர்தலில் அதிமுகநிச்சயம் வெற்றிபெறும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x