

லஷ்மன் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு’ இசை நாட்டிய நிகழ்ச்சி சென்னையில் இன்று தொடங்கி 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதுகுறித்து லஷ்மன் ஸ்ருதி இசையகத்தின் நிறுவனரும், ‘சென்னையில் திருவையாறு’ அமைப்பாளருமான லஷ்மன் கூறியதாவது:
‘சென்னையில் திருவையாறு’ என்ற கர்னாடக சங்கீத நாட்டிய நிகழ்ச்சி 12-வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்திய பாரம்பரியக் கலைகளின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் டிசம்பர் 18-ம் தேதி (இன்று) தொடங்கும் இந்த நிகழ்ச்சி, 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் 8 நிகழ்ச்சிகள் என மொத்தம் 60 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
‘சென்னையில் திருவையாறு’ இசை நாட்டிய நிகழ்ச்சியை திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் 18-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார். ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுப்புலட்சுமி, ‘பாரத ரத்னா’ எம்ஜிஆர் ஆகியோரது மெழுகுச் சிலைகளை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா திறந்துவைக்கிறார்.
தினமும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன், ராஜேஷ் வைத்யா, சிக்கில் குருசரண், மகதி, ரேவதி கிருஷ்ணன், ஷோபா சந்திரசேகர், கார்த்திக், நடிகை ஷோபனா, ஷோபனா விக்னேஷ் சவுமியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காலை 7 மணி, 8.30 மணி, 9.45 மணி, 11 மணி, பிற்பகல் 1 மணி, 2.45 மணி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். மாலை 4.45 மணி, இரவு 7.30 மணி நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் விற்பனை உண்டு. தினமும் இரவு 7.30 மணி நிகழ்ச்சி நிறைவுற்றதும் ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக இலவச இரவுப் பேருந்து வசதி உள்ளது.
இசைவிழாவில் நடைபெறும் அறிவுத்திறன் பரிசுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு அமெரிக்கப் பயணம் சென்று வர 2 விமான டிக்கெட்கள் முதல் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கர்னாடக இசைக் கலைஞர் ஷோபா சந்திரசேகர், மகதி, நடிகர் தாமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.