Published : 23 Jan 2023 07:00 AM
Last Updated : 23 Jan 2023 07:00 AM
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில், சுமார் 4.9 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 209 கிலோமீட்டர் நீளத்துக்கு, ரூ.699 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 161 கிலோமீட்டர் நீளத்துக்கான மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதனால்தான் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னையில் எங்கும் மழைநீர் பாதிப்பு ஏற்படவில்லை.
தற்போது, மாநகராட்சி சார்பில் 48 கிலோமீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து, சென்னையில் சாலைகளைச் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இன்னும் 4 மாதங்களுக்குள் முடிவடையும்.
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பும் பணியில் சட்டத் துறை ஈடுபட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சத்துக்கு பதில் அனுப்பப்படும். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT