Published : 23 Jan 2023 06:56 AM
Last Updated : 23 Jan 2023 06:56 AM

இயல், இசை, நாடகத்தை காப்பது நம் கடமை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: இயல், இசை, நாடகம் என்பது நமது கலாச்சாரம். இதை பேணிக் காப்பது நமது முக்கிய கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

கர்னாடக இசை மேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐசிசிஆர்), அரியக்குடி இசை அறக்கட்டளை, முத்தமிழ் பேரவை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், ஐசிசிஆர் இயக்குநர் அய்யனார், பிரபல கர்னாடக இசைப் பாடகர் ஆலப்புழா வெங்கடேசன், ஹம்சத்வனி சபா செயலர் ஆர்.சுந்தர், முத்தமிழ் பேரவைத் தலைவர் ராமானுஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

ஜி.கே.வாசன்: இயல், இசை, நாடகம் என்பது நமது கலாச்சாரம். இதைப் பேணிக் காப்பது நமது முக்கியக் கடமை. இப்பணியை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சிறப்பாக செய்து வருகிறது. 65 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மபூஷன்’ விருதை பெற்றவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். கச்சேரி நடத்தும் பாணியை அரியக்குடி பாணியாக மாற்றி புதுமை செய்தார். இத்தகைய இசை மேதைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவுகூரப்படுவார்கள்.

ஐசிசிஆர், ஸ்ரீஅரியக்குடி இசை அறக்கட்டளை, முத்தமிழ் பேரவை இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இவர்களது பணி மேலும் தொடர வேண்டும்.

வாகை சந்திரசேகர்: முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அரசு சார்பில் இயல் இசை நாடக மன்றத்துக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.3.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைக் கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ‘கலைமாமணி’ விருது பெற்று, நலிந்த நிலையில் இருக்கும் கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கும் திட்டம், ஆடை, ஆபரணங்கள், இசைக் கருவிகள் வாங்க 1,000 ஏழை கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். கலைஞர்களுக்கு நல்ல அரணாக இந்த அரசு அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

பந்தநல்லூர் பிஜிடி மணிவண்ணன் குழுவினரின் மங்கள இசையுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, நெய்வேலி சந்தனகோபாலன் (வாய்ப்பாட்டு), டெல்லி சுந்தரராஜன் (வயலின்), திருவாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்) குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. பின்னர், பரதநாட்டியக் கலைஞர் சித்ரா வெங்கட சுப்பிரமணியத்தின் ‘மிருத்யுஞ்சய நாட்டியாஞ்சலி’ பள்ளி மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x