10 ரூபாய் நாணய வதந்திக்கு முற்றுப்புள்ளி: மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை

10 ரூபாய் நாணய வதந்திக்கு முற்றுப்புள்ளி: மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Published on

சென்னை: பத்து ரூபாய் நாணயங்களின் நம்பகத்தன்மை மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மத்திய ரிசரவ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அப்போது, அந்த நாணயத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது.

பின்னர், அவ்வப்போது புதிய டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு வரப்படுகிறது. எனினும், பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வெளியாகும் வதந்தி காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழும அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 14 ஆண்டுகள் ஆகியும், பத்து ரூபாய் நாணயங்களின் நம்பகத்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், வதந்தியும் பரப்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் வர்த்தகசபைகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன.

குறிப்பாக, பேருந்து நடத்துநர்கள் மற்றும் கடைக்காரர்கள், சில வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு அண்மையில் கூடி விவாதித்தது. இதில் சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும், பேருந்துகளில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.

அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்புமின்றி நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும். மேலும், அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்களை வெளியிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in