

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து அரசு மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) 37-வது செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சுவாமிநாதன், செயலாளர் ராமலிங்கம் உட்பட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாதது பெரும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. எனவே உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இதன் மீது கவனம் ஈர்க்கும் வகையில் இனி வரும் காலங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்படும்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வரும் டிசிஎப் பணப்பலன் கிடைக்க வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும். மகப்பேறு சிகிச்சையின் போது தாய் சேய் இறப்புகளை தடுக்க அனைத்து பிரசவங்களும் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெற வேண்டும்.
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல் படுத்துவதில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்த திட்டத்தினால் அரசு மருத்துவர்களுக்கு பணி சுமை ஏற்படுவது மட்டுமல்லாமல் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் மூலம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கபட வேண்டும். மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் காலி பணியிடங்கள் உடனடியாக கால முறை ஊதியத்தில் நிரப்பபட வேண்டும். மாவட்ட சுகாதார குழுமம் மூலம் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பபடுவது கைவிட வேண்டும்.