

காரைக்குடி: தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழியில் கற்பது, எழுதுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்றார். தமிழக ஆளுநரும், வேந்தருமாகிய ஆர்.என்.ரவி 1,124 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 1,09,615 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது: தமிழ் மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க மொழி. தமிழ் கலாச்சாரம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது. இதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளன. தமிழக கோயில்களே முக்கிய சான்றுகளாக உள்ளன. தஞ்சை பெரிய கோயில் கட்டிடக் கலைக்கு உதாரணம். மற்ற உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையில் தாய் மொழியில் கற்பது, எழுதுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியோடு மற்ற மொழிகளைப் படிக்கலாம்.
மத்திய தேர்வாணையம் தேர்வுகளை தற்போது தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனப் புத்தகங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளன.
இந்தியக் கல்வி வேலைவாய்ப்புக்கும், அறிவியல் தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் வழங்குகிறது. மொபைல் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டை சார்ந்திருந்தோம். தற்போது சென்னை ஐஐடி 5 ‘ஜி’ தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சத்தை வடிவமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, கே.ஆர்.பெரியகருப்பன், உயர் கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அருங்காட்சியகத்தை ஆளுநர் பார்வையிட்டார். பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார். முன்னதாக ஆளுநர் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் செய்தார்.