

கோவை: அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 திரையரங்குகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி துணிவு, வாரிசு ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டன. கோவையில் பல திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
வழக்குப் பதிவு
இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாததால், 6 திரையரங்குகளைச் சேர்ந்த மேலாளர்கள் மீது தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறைச் சட்டம் 1955-ன்படி, ரேஸ்கோர்ஸ், காட்டூர், பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே அனுமதியின்றி சிறப்புக்காட்சிகள் வெளியிட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு ரேஸ்கோர்ஸ், நூறடி சாலை, ரயில் நிலையம் சாலை, ராம்நகர், போத்தனூர், பீளமேடு பகுதிகளில் உள்ள 8 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘தடையை மீறி சிறப்புக்காட்சிகள் வெளியிடப்பட்டது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திரையரங்கு நிர்வாகத்தினர் அளிக்கும் விளக்கத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.