பனிப்பொழிவால் கருகும் கறிவேப்பிலை செடிகள்: இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை

பனிப்பொழிவால் கருகும் கறிவேப்பிலை செடிகள்: இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை
Updated on
1 min read

கோவை: கடும் பனிப்பொழிவால் கறிவேப்பிலை செடிகள் கருகி, விளைச்சல் பாதிக்கப்படுவதால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, ஆதிமாதையனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் கறிவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிவேப்பிலை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டுள்ள கடும் பனியால் கறிவேப்பிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் மாலை 5 மணி முதல் காலை 8 மணிவரை கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது.

இதனால் கறிவேப்பிலை செடிகளின் வளர்ச்சி பாதித்து கருகிவிடுகிறது. பூச்சி தாக்குதலும் உள்ளது. இலைகள் சுருங்கி புள்ளிகளாக காணப்படுகின்றன. இதனால் கறிவேப்பிலை உற்பத்தி குறைந்துள்ளது’’ என்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறும்போது,‘‘பனி, நோயால் கறிவேப்பிலை பாதிக்கப்படுவதால் ஏற்கெனவே கிடைத்த விளைச்சலில் 20 சதவிகிதம் கூட தற்போது கிடைப்பதில்லை.100 கிலோ கிடைக்க வேண்டிய இடத்தில் தற்போது 15 கிலோ கறிவேப்பிலை மட்டுமே கிடைக்கிறது.

உற்பத்தி பாதிப்பால் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. கறிவேப்பிலை சாகுபடியை பாதுகாக்க தகுந்த நோய் தடுப்பு வழிமுறைகளை வேளாண் துறையினர் தெரிவிக்க வேண்டும். கறிவேப்பிலை விவசாயத்தை பாதுகாக்க தனி வாரியத்தை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in