

மறைந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக-வை வழிநடத்த தேவையான தலைமைப் பண்புகள் கொண்டவரே சசிகலா என்று கொள்கைப் பரப்பு செயலாளர் தம்பிதுரை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே ஜெயலலிதாவின் தாரக மந்திரம். இந்நிலையில் ‘அம்மா’ நம்மிடையே இல்லாத சூழலில் அதிமுக-வை வழிநடத்தும் தகுதியும், ஆற்றலும், அனுபவமும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர் சசிகலா மட்டுமே.
கழகத்தையும் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக மதிப்பிற்குரிய ‘சின்னம்மா’ திகழ்கிறார்கள்.
கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகி அவருடன் வாழ்ந்து எல்லா வகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சசிகலா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் சிறை சென்று கொடுமைகளுக்கு ஆளானவர். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் அவரைக் காப்பாற்றியவர். கட்சி நிர்வாகத்திலும், ஆட்சியிலும் அரிய ஆலோசனைகளை வழங்கியவர்.
கழகக் கொள்கைப் பரப்பு செயலாளர் என்ற முறையில் என்னுடைய பணிகளுக்கு அரிய பலவழிகாட்டுதல்களையும் சசிகலா அளித்து வந்திருக்கிறார்கள்.
பல்வேறு சோதனைகளையும், சரித்திர நிகழ்வுகளையும் அம்மா அவர்களோடு தோளோடு தோள் நின்று எதிர்கொண்ட இவரிடம் கட்சியை வழிநடத்த தேவையான தலைமைப் பண்புகள் உள்ளன.
இவ்வாறு கூறியுள்ளார் தம்பிதுரை