

சென்னை: இந்திய கடற்படை சார்பில், ‘புனித் சாகர் அபியான்’ திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, சென்னை அடுத்த ஆவடி கொள்ளுமேடு ஏரி, கல்பாக்கம் கடற்கரை, ராமநாதபுரத்தில் உள்ள வலங்காபுரி கடற்கரை, நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் கடற்கரை, திருநெல்வேயில் உள்ள உவரி கடற்கரை ஆகியவற்றை தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடற்படையினருடன் என்சிசி மாணவர்களும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியின்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் அட்டைகள், தெர்மோகோல்கள், கண்ணாடிபாட்டில் துண்டுகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், கடல் மற்றும் கடற்கரைகளில் தூய்மையைப் பராமரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.